______ ஆகிய நான்...

கவிதைக்கும்
காதலுண்டு
காதலுக்கும்
கதையுண்டு

கண்ணாடி
முன்னின்று
திரும்புகிறேன்
என் கதைக்கு....

வண்ணத்துப்பூச்சி
வட்டமிடும் வாசம்
கொண்டவள் நீ

பட்டுப்பூச்சியும்
நூலெடுக்க உன் 
கூந்தலில்
ரிங்காரமிடும்

சுட்டெரிக்கும்
சூரியனும்  சுகமாய்
ஓய்வெடுக்கும்
கண்கள் உனது

நட்சத்திரப்பட்டலம்
இறங்கிவந்து அணிசேர்த்த
பல்வரிசை உனது

வெண்ணிலவும்
கடன் கேட்கும்
பிரகாசம்
உனது முகத்தில்

இறைவனும் சற்றே
இடறிவிழும்
இடையழகை
கொண்டவள்  நீ

காதலெனும் போதையில்
கவிஞ்சனாய் மாறிய
இளவட்டங்களின்
இசைபாட்டில் சற்றே
இசைந்துவிட்டேன்  நான்

காதலும் களவியும்
வேறில்லை என்றவன்
காமுற்றுக்கிடந்த என்னை
கால்வாயில்
கதரவிட்டுசென்றான்

கண்மூடித்திறக்கையில்
கண்ணாமூச்சி ஆட்டம்தானடி
காதலென கூறிமறைந்தனந்த
கயவன்

விட்டில்ப்பூச்சிக்கு
வீட்டில் இடமில்லையென
விரட்டியடித்தன
வீட்டுச்சொந்தங்கள்

தீயில் எரிந்த
திரைச்சீலையின்
தீட்டாய் திரும்பி நடந்தேன் 

இலையுதிர்க்காலத்தில்
உதிர்ந்த
இலையாய் கேட்பாரற்று
கிடந்தேன்

வாசமிழந்து
காயும் தருவாயில்
வண்டுகள் மீண்டும்
எனை வட்டமிட்டன

வசந்தகால வண்டை போல
அவை மீண்டும் மீண்டும்
என்னிடத்தில் வந்தன

மனத்தால் இறந்த
எனை பணத்தால்
சிறையிட்டனர் சிலர்

நரம்பறுந்த வீணையை
நார்க்கொண்டு
மீட்டிக்கொண்டது 
சில நரிக்கூட்டம்

காதலெனும்
கால்வாயில்
கயவனை நம்பி
கால்வைத்த
பாவத்தால்

கண்டவனிடம்
கரைந்துபோகும்
சிலமணி நேரத்துக் காதலி
நான் இன்று

மும்பை எனும்
கான்கிரிட் வனத்தில்
மங்கிய ஒளியில்
விலைப்போய்க்கொண்டிருக்கும்
'பல' ராவனன்களின்
சீதை நான்...




   

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக