சொர்க்க வாழ்க்கை



சொர்க்க வாழ்க்கை


விளையாட்டாக
விளையாடிய
ஆட்டம் வாழ்க்கை

விளையாட்டாக ஆரம்பித்து
விளையாட்டாக வாழ்ந்து
கற்றுக்கொண்ட என் வாழ்க்கை

கற்கை நன்று
அனுபவ ஆசிரியர்
அத்துணை ஆயிரம்
பழமொழிகள் கற்று
வாழ ஆரம்பிக்கையில்
நாட்கள் கடந்துவிட்டன

முதன்முதலாய்
மூச்சுக் குழாயில்
சுவாசம் உணர்ந்த
அன்னை மடி முதல்

இறுதியாய் சுவாசம் தந்த
பூமி தாயின் அன்பின் மடி வரை
வாழ்க்கை முற்றிலும் மாறுப்பட்டது

நேற்றைக்கும்
இன்றைக்குமான பொழுதுகள்
எப்போதும்
என்றென்றைக்கும் வேறானவை

தத்தி தாவி
தவழுகையில்
அன்னை மடி
சொர்க்கம்

அழுது அடம் பிடித்து
பள்ளி செல்கையில்
தந்தை தோள்கள்
சொர்க்கம்

முதன்முதலாய்
தோல்வியில் துடிக்கையில்
நட்பின் கரம் தந்த
நண்பன் கைகள் சொர்க்கம்

வாலிபத்தில்
வலிய வந்து பேசும்
பெண்களின் கண்கள்
சொர்க்கம்

மனமுடிச்சு
முடிந்தவுடன் மனையாளின்
மாண்புமிக்க அன்பு
சொர்க்கம்

முதன்முதலாய்
என்னில் இருந்து
பிரிந்து பிறந்த
என் குழந்தையின்
மென் பாதங்கள்
சொர்க்கம்

என் வாழ்க்கையை
என் பிள்ளை வாழ்ந்து
எனை அவன் பிள்ளையாய்
முதுமையில் காக்கையில்
என் பிள்ளை கரங்கள்
சொர்க்கம்

இறைவனே இப்பூவுலகின்
சொர்க்கங்கள் அனைத்தையும்
நான் கண்டுவிட்டேன்

இப்பொழுதே
இறந்த எனக்கு
தேவலோகத்தில்
வேண்டியதில்லை ஓர்
சொர்க்கம்

நரகமும்
எனக்கு
சொர்க்கமே

இதுவரையில்
சொர்க்கம் காணாத
பாசம்தேடும்
மனிதர்களுக்கு
காட்டுங்கள்
அன்பெனும் சொர்கத்தை.....