ஆண்களின் உலகம்

ஈரெட்டு பதினாறாம் 
இளமை இன்னமும் 
கசக்கிறது நினைவுகளில் 

கண்ணில் காதல் கொண்டு 
காற்றில் கரையும் வயதில்
வறுமையில் வாடும் இளைஞ்சருக்கு 
இளமை இன்னமும் கசக்கிறது  

தகப்பன் இல்லாகுடும்பத்தில் 
ஆண் பிள்ளை தான் 
தலைவன்   

சுகந்தங்களின் சுக வலியை 
அனுபவிக்கும் வயதில் 
வட்டிக்கு கடன் வாங்கி
விமானம் ஏறியவன் நான்   

அக்காளின் மகப்பேறு 
தங்கையின் மாங்கல்யம் 
புதுவீட்டின்  குடியேற்றம்
என நீள்கிறது 
சுப நிகழ்சிகளின் பட்டியல் 
என் திருமணத்தை தவிர

இருபத்தைந்து  வயது 
இளமை இம்சைகளை தள்ளி 
முப்பது வயது முறையான 
ஆசைகளுக்கும் அணைபோட்டு 
காத்திருக்கையில் 

அம்மாவின் 
டெலிபோன்  சத்தம் 
அலைகடல்  கடந்து 
அலைந்து வந்தது 

பெண் பார்க்கும் 
படலம் முடிந்துவிட்டது 
மாப்பிள்ளையை பெண்ணுக்கும் பிடித்துவிட்டது 
வந்து  முகம் காட்டு மகனே
என கூறி மகிழ்ந்தால் 

பத்து நாள் விடுமுறையில் 
விருந்தாளியாய் வந்தவனுக்கு விளங்கு மாட்டி 
மனைவியாக்கினர்கள் அவளை 
முகம் பார்த்த முதல் நாளே 
முதலிரவு அறையில் நானும் அவளும் 
சுழலும் மின்விசிறியின்  கீழ் 
சலனமற்று வியர்த்து  கிடந்தோம்

என்னுள் இருந்த ஆண் மிருகம் 
அவளை அந்த அர்த்தங்களற்ற இரவில் 
கொன்று தின்றது 

கலவியின் 
கருவறையில் நுழைந்த நான் 
அவள் முகத்தையும் முழுவதுமாய் 
பார்க்கவில்லை 
மூன்றாம் நாளே விடுமுறை முடிந்து 
விமானம் ஏறுகையில் 
ஆயிரம் அர்த்தங்கள் செறியும் பார்வையை 
அவள் வீசினால் 

ஆனால் அதன் அர்த்தங்கள்  எல்லாம்  
அயல் நாட்டிற்கு வந்து 
சேர்ந்த பின்னர்தான் தருகிறது
என் தனியறை படுக்கையும்  அந்த மின்விசிறியும்...


நன்றி, 
திரு பாரதி தம்பி,
(ஆண்களின் உலகம்  தலைப்பு மற்றும் கரு)
அனந்த விகடன்.




 
 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக